முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
முதலைகள் நண்பரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் இர்வினுக்கு டூடுள் வெளியிட்டு கூகுள் சிறப்பித்துள்ளது.
காட்டுயிர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் காட்டுக்குச் சென்று காட்டில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து ‘க்ரோக்கடைல் ஹன்ட்டர்’ என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் ஸ்டீவ் இர்வின்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள உயிரினங்களைப் பேணிக் காத்தவர் ஸ்டீவ். ஆறு மாதக் குழந்தையாக தனது மகனைக் கையில் வைத்துக் கொண்டே முதலைக்கு அவர் உணவளித்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. மன்னிப்பு கோரி விவகாரத்தை முடித்துவைத்தார் ஸ்டீவ்.
ஆபத்தான கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகப் படமெடுத்துக் கொண்டிருந்தபோது மார்பில் திருக்கை மீன் கொட்டியதில் 2006-ம் ஆண்டு ஸ்டீவ் காலமானார்.
அதைத் தொடர்ந்து அவரின் மகனும், மகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். தந்தை ஸ்டீவ் உடன் இணைந்து எட்டு வயதிலேயே சிறு முதலைகள், பாம்பு, உடும்பு போன்ற உயிரினங்களைக் கையாளப் பழகியுள்ளார் பிண்டி. அதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகிறார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் ‘ஆஸ்திரேலிய ஜியாகிரஃபிக் சொஸைட்டியின் இளம் பாதுகாவலர்’ என்ற உயரிய விருதை 2014-ல் பிண்டி வென்றார். தந்தை விட்டுச் சென்ற ‘க்ரோக்கடைல் டைரீஸ்’-ன் மிச்சப் பக்கங்களை தனது சாதனைகளால் பிண்டி நிரப்பி வருகிறார்.
இந்நிலையில் ஸ்டீவ் இர்வினின் 57-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இதைப் போற்றும் விதமாக கூகுள், இர்வினுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.