மேலும் ஒரு பெரிய தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டம்: மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை
புல்வாமா தாக்குதலால் உற்சாக மடைந்துள்ள மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பு, மேலும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜேஇஎம் தீவிரவாதி ஒருவன் கடந்த வாரம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஜம்மு அல்லது காஷ்மீருக்கு வெளியே இதைவிட மிகப்பெரிய தாக்குதலை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக உளவுத் துறை வட்டாரங் கள் கூறியிருப்பதாவது:
கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளுக்கிடையே, பாகிஸ்தானில் உள்ள ஜேஇஎம் அமைப்பின் முக்கிய தலைவரும் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளும் தொலைபேசியில் உரையாடியதை உளவுத் துறையினர் இடைமறித்து கேட்டுள்ளனர்.
ஜேஇஎம் அமைப்பைச் சேர்ந்த 3 தற்கொலைப் படையினரை உள்ளடக்கிய 21 பேர் அடங்கிய குழு கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பது அந்த உரையாடல் மூலம் தெரியவந்துள்ளது. காஷ்மீருக்கு வெளியே 2 தாக்குதல் உட்பட 3 தாக்குதல்களை நடத்தும் நோக்கத் துடன் அவர்கள் வந்துள்ளனர்.
மேலும் புல்வாமா தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு கள் குறித்த வீடியோ காட்சியை வெளியிடவும் ஜேஇஎம் திட்ட மிட்டுள்ளது. அந்த வீடியோ, சமீபத் தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஆதில் அகமது தாரை புகழும் வகை யில் இருக்கும் என்றும், இது தங்கள் இயக்கத்துக்கு இளைஞர் களை சேர்க்க உதவும் என்று ஜேஇஎம் கருதுவதாகவும் கூறப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கிடையிலான உரையாடல், இந்தியாவை தீவிர வாதமயமாக்க வேண்டும் என்ற இலக்குடன் நடந்த ‘உளவியல் நடவடிக்கை’யாக இருக்கக் கூடும்” என்றனர்.