மார்ச் 1-ல் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது: மையங்களுக்கு விடைத்தாள் அனுப்பும் பணி தீவிரம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் தேர்வுக்கான விடைத்தாள் அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரையும் மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ல் முடிகின்றன.
இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் தேர்வுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 61 லட்சம் மாணவர்களும் மற்றும் 24 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். இதற்காக 2,941தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வில்8 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்களும், 5,423 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 2,912 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், 10-ம் வகுப்புத் தேர்வில் 10.10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 3,741 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் தேர்வை சிறைக் கைதிகள் 387 பேரும் எழுதுகின்றனர்.
தேர்வு மைய கண்காணிப் பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வு மையங் களுக்கு விடைத்தாள்களும் அனுப்பப்பட்டுவிட்டன.
இதைத்தொடர்ந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாக மையங்களுக்கு இப்போது அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதவிர பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாள ருக்கான வழிகாட்டுதல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு மாறாக முறைகேடு நடைபெறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.