Breaking News
முதலாவது ஒரு நாள் போட்டியில் கெய்லின் அதிரடி வீணானது 361 ரன் இலக்கை எட்டி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றிஜாசன் ராய், ஜோரூட் சதம் அடித்தனர்

வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் பிரிட்ஜ் டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது.

முதலில் நிதானமாகவும் பிறகு அதிரடியாகவும் ஆடிய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 129 பந்துகளில் 3 பவுண்டரி, 12 சிக்சருடன் 135 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 64 ரன்னும், டேரன் பிராவோ 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியில் அமர்க்களப்படுத்தியது. 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை ருசித்தது. 7-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 85 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்சருடன் 123 ரன்னும், 14-வது சதம் கண்ட ஜோ ரூட் 97 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 102 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 65 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். ஜாசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியினர் பல கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். ஜாசன் ராய் மட்டும் 4 முறை கண்டத்தில் இருந்து தப்பினார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் ‘இதற்கு முன்பு இதேபோல் நிலைமையை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். எங்களால் எவ்வளவு பெரிய இலக்கையும் சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எப்பொழுதும் உண்டு. ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ரன் ரேட்டை சரியாக கொண்டு சென்ற நாங்கள் எந்தவொரு கட்டத்திலும் நெருக்கடிக்கு ஆளாகவில்லை. ஜாசன் ராய் ஆடிய விதம் வியப்புக்குரியதாக இருந்தது. இதேபோல் ஜோரூட் பங்களிப்பையும் மறக்க முடியாது’ என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறும் போது ‘எங்கள் பவுலர்கள் பல வாய்ப்புகளை உருவாக்கி தந்தனர். அதனை நாங்கள் பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம். தரமான வீரர்களுக்கு எதிராக கேட்ச்களை தவறவிட்டால் அதற்கான விளைவுகளை (தோல்வி) சந்தித்து தான் ஆக வேண்டும். கெய்ல் தொடக்கத்தில் நிதானமாக ஆடியதை குறை சொல்ல முடியாது. அவர் முதலில் தன்னை நிலை நிறுத்தி கொண்டு பிறகு அதிரடியாக ஆடினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார்’ என்றார்.

23 சிக்சர்கள் அடித்து வெஸ்ட்இண்டீஸ் அணி புதிய சாதனை

* இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 361 ரன் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து (சேசிங்) பிரமிக்க வைத்து. ஒரு நாள் போட்டி வரலாற்றில் 3-வது அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 435 ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்ததே உலக சாதனையாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2016-ம் ஆண்டில் டர்பனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 372 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்திருந்தது.

* இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்தது. ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து அணி 22 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்து வெஸ்ட்இண்டீஸ் அணி புதிய சாதனை படைத்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.