சென்னை போரூரில் பயங்கர தீ விபத்து184 கார்கள் எரிந்து நாசம் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
சென்னை போரூரில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையையொட்டி தனியாருக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலில் எப்போதும் ஒரு காவலாளி இருப்பார்.
இந்த இடத்தின் ஒரு பகுதியில் ‘உட்டோ’ என்னும் தனியார் கால் டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான 211 கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் புதிய மற்றும் பழைய கார்களும், தவணை முறையில் வாங்கி, பணம் கட்டமுடியாததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்களும் அடங்கும்.
அந்த தனியார் கால் டாக்சி நிறுவன டிரைவர்கள், இந்த இடத்தில் காரை கொண்டு வந்து நிறுத்தி ஓய்வு எடுத்துவிட்டு செல்வார்கள்.
கார்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தை சுற்றி உள்ள காலி இடம் முழுவதும் சுமார் 3 அடி உயரத்துக்கு புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த புற்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கின்றன.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த இடத்தின் ஒரு பகுதியில் உள்ள காய்ந்த புற்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. புற்கள்தான் தீப்பிடித்து எரிகிறது என யாரும் அதை கவனிக்காமல் இருந்துவிட்டதாக தெரிகிறது.
தீ வேகமாக பரவி முதலில் அங்கு நிறுத்தி இருந்த 3 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் கார்கள் வரிசையாக அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் காற்றின் வேகத்தில் அருகில் இருந்த மற்ற கார்களுக்கும் வேகமாக தீ பரவியது.
கார்களில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் டேங்குகள் தீப்பிடித்ததால் கார்களில் உள்ள கண்ணாடிகள் வெடித்து சிதறின. ஒரே நேரத்தில் அதிக கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. பல அடி உயரத்துக்கு கரும்புகை வந்தது.
தீ விபத்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, கே.கே.நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாலும், கார்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதாலும் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக அமைந்தது. எனவே தண்ணீரோடு தீயை அணைக்கும் ஒருவித ரசாயனத்தை கலந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் தண்ணீர் தீர்ந்துபோனதால் அந்த வழியே சென்ற தண்ணீர் லாரிகளையும் மடக்கி தீயை அணைக்க தண்ணீர் எடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களோடு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் ஒத்துழைப்பு கொடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி கார்களில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் அங்கு நிறுத்தி இருந்த 211 கார்களில் 184 கார்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. 27 கார்கள் மட்டும் தீயில் சிக்காமல் தப்பியது.
தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம், செட்டியார் அகரம், பரணிபுத்தூர், துண்டலம், நூம்பல், போரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
கார்கள் தீப்பிடித்து எரிவதை வேடிக்கை பார்க்க சாலையோரம் திரளானவர்கள் திரண்டு இருந்தனர். இதனால் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு போக்குவரத்தை சீரமைத்ததுடன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு எதிரே உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள்ளும் கரும்புகை சூழ்ந்தது. புற்கள் தீயில் எரிந்ததால் காற்றில் பறந்து வந்த கரித் துகள்கள் மூக்கில் ஏறியதால் நோயாளிகள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு முககவசம் அளிக்கப்பட்டது.
கார்கள் தீப்பிடித்து எரிந்தபோது அங்கு ஒரு சில டிரைவர்களே இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் யாராவது சிகரெட் பிடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் காய்ந்த புற்கள் மீது போட்டதால் அவை தீப்பிடித்ததா? அல்லது கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு பின்புறம் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் யாராவது குப்பையை கொளுத்தினார்களா? அல்லது காரில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி வேலையா? என பல்வேறு கோணங்களில் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு தாம்பரம் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், பல்லாவரம் தாசில்தார் ஹேமலதா ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பயங்கர தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.