துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய மோடி
உ.பி.,யின் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்தார்.
கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக உ.பி., திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புனிதநீராடி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுவதற்காக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கினார். தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக, விருதுபெற்ற 5 துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, பூஜை செய்தார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய மோடி, கும்பமேளாவிற்காக 20,000 க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இவற்றை துப்புரவு பணியாளர்கள் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். எனது சகோதர, சகோதரிகளான இவர்கள் தினமும் அதிகாலையிலேயே எழுகிறார்கள். இரவில் தாமதமாகவே தூங்கச் செல்கிறார்கள். நாள் முழுவதும் இப்பகுதியை தூய்மை வைத்துக் கொள்வதிலேயே கழிக்கிறார்கள். அவர்கள் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொய்வும் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் என் நினைவில் இருப்பார்கள் என்றார்.