மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க தடை
ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்புள்ளது. அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் உள்நோக்கம் உள்ளது. எனவே நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “இந்த வழக்கில் நிர்மலாதேவி மற்றும் சிலரை மட்டுமே சிக்க வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடித்துள்ளனர். ஆனால் மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய ஆடியோவில் உயர் அதிகாரிகள் என்ற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் யாரிடமும் விசாரிக்கவில்லை. இதை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்“ என்று வாதாடினார்.
இதையடுத்து நீதிபதி கிருபாகரன், “நிர்மலாதேவியை கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவரை ஜாமீனில் விடுதலை செய்யவில்லை. அவரை வெளியே விடுவதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? அவர் என்ன ‘சூப்பர் குற்றவாளியா’? அவரது ஆடியோவில் உயர் அதிகாரிகள் என்று வருகிறது. அதன்படி உயர் அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டதா?
இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டியின் அறிக்கை தற்போது யாரிடம் உள்ளது? அந்த அறிக்கையின் தற்போதைய நிலை என்ன?” என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
பின்னர் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை திருப்தி இல்லை. எனவே இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.