Breaking News
8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்: பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள். 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு உள்ளன.

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுதுகிறார்கள்.

சென்னையில் 408 பள்ளிகளில் இருந்து 158 தேர்வு மையங்களில் மாணவிகள் 26 ஆயிரத்து 285 பேரும், மாணவர்கள் 23 ஆயிரத்து 134 பேரும் என மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 408 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு என 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 884 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ளனர்.

மதுரை, வேலூர், கடலூர், சேலம், கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் 50 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம்) அரசுத் தேர்வுத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. அந்த சீட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு உள்ளன.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரி, சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளால் நியமிக்கப்பட்டு உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது. இதனை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் உள்பட இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில் இந்த தேர்வு கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.