Breaking News
அபிநந்தன் இன்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் : பெற்றோர்கள் டெல்லி விரைந்தனர்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந்தேதி நடத்திய கொடூர தாக்குதலாலும், அதைத் தொடர்ந்து 26-ந்தேதி பாகிஸ்தானுக்கு இந்திய போர் விமானங்கள் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்து கொடுத்த பதிலடியாலும் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன. அவற்றை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன.

ஆனால் இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராதவகையில் ‘மிக்-21’ ரக போர் விமானம் ஒன்றை இந்தியா இழக்க நேரிட்டது.

அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததால், அதில் இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் சிறை பிடித்தது. இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். இது நாட்டின் 130 கோடி மக்கள் மனங்களிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் படையின் பிடியில் ரத்தக் காயங்களுடன் அபிநந்தன் காணப்பட்ட வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. இதில் ஜெனீவா உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறியுள்ளதாக கூறி, இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டது.

அபிநந்தனை எந்த தீங்கும் செய்யாமல் உடனடியாக பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

அபிநந்தனை விடுவிக்க இந்தியா தூதரக ரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டது. எந்தவித நிபந்தனையும் இன்றி அவரை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுடனும், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனையும் தொடர்பு கொண்டு பேசினார். அபிநந்தனை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், அரபு நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அபிநந்தனை விடுவிக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர், இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு சென்று, வெளியுறவு செயலாளரை சந்தித்து அபிநந்தன் விடுதலைக்கு வலியுறுத்தினார்.

தூதரக ரீதியில் உலக நாடுகளுடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பு கொண்டு, அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அபிநந்தனை விடுவித்து ஆக வேண்டும் என்ற அழுத்தத்தை பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் தந்தன.

இதற்கிடையே வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வட கொரிய தலைவர் கிம்ஜாங் அன் சந்திப்புக்கு பின்னர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வருகிற பதற்றத்தை தணிப் பதற்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வருகிறது. இரு தரப்பிலும் இருந்து அர்த்தமுள்ள நல்ல செய்திகள் வந்துள்ளன” என குறிப்பிட்டார். இது அபிநந்தன் விடுதலைக்கு சாதகமான தகவலாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து பதற்றத்தை தணிப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தயார் என அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி அறிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானியை விடுவிப்பதற்கு பரிசீலிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பேசினார்.

அப்போது அவர், “நமது காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி, நல்லெண்ண அடிப்படையில் நாளை (இன்று) விடுவிக்கப்படுவார். இது அமைதிப்பேச்சுவார்த்தைக்கான முதல் படியாக அமையும்” என குறிப்பிட்டார்.

அப்போது பாகிஸ்தான் எம்.பி.க்கள் மேஜையை தட்டி உற்சாகத்துடன், அதை வரவேற்றனர்.

அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிப்பது, தூதரக ரீதியில் இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இதுபற்றி கருத்து தெரிவித்த இந்தியா, அபிநந்தனை மீட்டு கொண்டு வருவதற்காக எந்தவொரு சமரசமும் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டது.

அபிநந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறார். அவர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார். அவர் மும்பை அல்லது டெல்லி வந்து சேருவார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல், அபிநந்தன் குடும்பத்தினருக்கும், நாட்டு மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. இதுகுறித்து, பலரும் சமூக ஊடகங்களில் பதிவுகளை செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை விமானி அபிநந்தன், இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். இதனை அறிந்து சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தனின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து விடுதலையாகி வரும் தனது மகனை வரவேற்பதற்காக அபிநந்தனின் தந்தை வர்தமான், தாயார் டாக்டர் ஷோபா, சித்தப்பா டாக்டர் பிரசாத் அஜித், அவரது மனைவி உஷா, உறவினர் அசோக் பானுகுமார் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 10.35 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்று அடைந்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.