Breaking News
விமான தாக்குதல் குறித்த ஆதாரங்களை கேட்பதா? – எதிர்க்கட்சிகளுக்கு மோடி கடும் கண்டனம்

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.

துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது அவர்கள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்ததில் 40 வீரர்கள், வீர மரணம் அடைந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது.

அதற்கு 12 நாளில் இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் மிராஜ் ரக போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, புலவாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்தன. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் 350 பயங்கரவாதிகளை விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சூடான பதில் அளித்தார்.

பீகாரில், பாட்னா நகரில் வரலாற்றுச்சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோருடன் அவர் ஒரே மேடையில் தோன்றி பேசினார்.

அப்போது அவர் ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

புலவாமாவில் கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படையினர், நமது துணை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தருகிற வகையில் மிகுந்த வீரமிக்க நமது விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதல் நடத்தினர்.

இந்த வான்தாக்குதல், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்காக வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஒன்று. ஆனால் இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும், அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கவேண்டிய தருணத்தில் மாறுபட்ட தொனியில் கருத்து வெளியிடுகின்றன. இதன் மோசமான விளைவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும். ஆனால் 21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றன. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்த விமானப்படையினரின் துணிச்சலான செயலுக்கு அவர்கள் ஆதாரம் கேட்கிறார்கள்.

பயங்கரவாத சவாலை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிற பாதுகாப்பு படைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, படை வீரர்களின் மன உறுதியை குலைக்கிற விதத்தில் நடந்து கொள்கின்றன.

எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக சதி செய்கின்றன. நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன.

எல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டிருக்கிற நேரத்தில், பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சியினர் கருத்துகளை வெளியிடுகின்றனர்.

இது புதிய இந்தியா. தனது வீரர்கள் கொல்லப்படுவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்காது.

தற்போதைய பிரச்சினை, என்னை அகற்றுவதற்கு அழைப்பு விடுப்பது அல்ல. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அழைப்பு விடுப்பதுதான்.

50 ஆண்டு கால வரலாற்றில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது சாதனை ஆகும். இந்தியாவுக்கு ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை சவுதி அரேபியா அதிகரித்துள்ளது. இதற்காக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி வேறு எந்த நாட்டுக்கும் அளிக்கப்படவில்லை.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அங்கு சிறைகளில் வாடுகிற 850 இந்தியர்களை விடுவிக்கவும் சவுதி பட்டத்து இளவரசர் முன் வந்துள்ளார். இது இந்தியாவின் மேம்பட்ட நிலையைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி தன் சுய நலன்களுக்காக அரசியல் செய்து வந்திருப்பதையும் அம்பலப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.