350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது? ப.சிதம்பரம் கேள்வி
பீகாரில், பாட்னா நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்பொழுது, புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படையினர், நமது துணை ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தருகிற வகையில் மிகுந்த வீரமிக்க நமது விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும். ஆனால் 21 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுகின்றன. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்த விமானப்படையினரின் துணிச்சலான செயலுக்கு அவர்கள் ஆதாரம் கேட்கிறார்கள்.
பயங்கரவாத சவாலை எதிர்த்து போரிட்டுக்கொண்டிருக்கிற பாதுகாப்பு படைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, படை வீரர்களின் மன உறுதியை குலைக்கிற விதத்தில் நடந்து கொள்கின்றன என பேசினார்.
இதுபற்றி முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய விமான படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர் திரு. ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்.
விமான படையின் துணை தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்து கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?
இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.0