அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவதில் இழுபறி ஏன்? ஜெயக்குமார் பதில்
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அ.தி.மு.க. பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், இணை செயலாளர் ராஜ் சத்யன், அமைச்சர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளரும், செய்தித்தொடர்பாளருமான சி.பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழக அரசு செய்த சாதனைகளை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’, ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த தேர்தல் பிரசார ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை தொகுத்து பெரும்பாலானவர்களுக்கு அனுப்பி பெருவாரியான வாக்குகளை பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்ப அணி அ.தி.மு.க.வுக்கு இதயம் போன்றது. எந்த தேர்தல் நடந்தாலும் ஈட்டி முனையாக, எதிரிகளை அழிக்கும் போர் வாளாக, ‘மிராஜ் 2000’ போன்று எதிரிகளை அழிக்கும் ஆற்றல் படைத்திருக்கின்ற ஒரு அணியாக தகவல் தொழில்நுட்ப அணி இருக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சமூக வலைத்தளங்களில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, அவர்களை புறமுதுகிட்டு ஓட செய்கின்ற ஒரு புறநானூற்றுப்படையாக தகவல் தொழில்நுட்ப அணி விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. தான் முதலில் கூட்டணியை அமைத்தது. ஆனால் கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறதே ஏன்?
பதில்:- தேர்தல் கூட்டணி இறுதிப்பெற்று, விரைவில் நல்ல முடிவு வரும். எல்லாம் சுமுகமாக, சுபமாக முடியும்.
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணி நிறைவு பெற்றிருக்கிறதா?
பதில்:- பேச்சுவார்த்தை, சுமுக அளவில் நடைபெற்று மெகா கூட்டணி முழுமையான அளவுக்கு அமைக்கப்பெற்றுள்ளது. இதனால் எதிரிகள் தூக்கம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக மக்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அமோக ஆதரவு தந்து, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை தேடி தருவார்கள்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் வருகிற 6-ந்தேதி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் தே.மு.தி.க. இடம் பெறுமா?
பதில்:- தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் போர்க்கால அடிப்படையில் தேர்தலுக்கான பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது சென்ற வேகத்திலேயே அ.தி.மு.க. தற்போதும் பயணிக்கிறது. ‘சூப்பர் ஜெட்’ வேகத்தில் செல்வதால் அனைத்திலும் அ.தி.மு.க. கூட்டணி தான் முந்தும்.
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வர உள்ளன. இந்த கட்சிகள் ஜெயலலிதாவால் விமர்சனம் செய்யப்பட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறியவை. மீண்டும் அந்த கட்சிகள் கூட்டணியில் இணைவதால் முரண்பாடு இருக்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். மக்களுடைய விமர்சனத்தை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறீர்கள்?
பதில்:- எங்களை கழுத்தை நெரித்து பா.ஜ.க., கூட்டணிக்கு உடன்பட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். அ.தி.மு.க. யானை பலம் கொண்ட கட்சி. எங்களுடைய கழுத்தை யாரும் நெரிக்க முடியாது. கழுத்தை, தும்பிக்கையை தொட்டால் யானை தூக்கி அடித்துவிடும். ஆனால் அவர்களால் (முத்தரசன் மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள்) கோழியின் கழுத்தை தான் திருக முடியும். ஆட்டை குளிப்பாட்டி, குங்குமம், மஞ்சள் பூசி கோவிலில் பலியிடுவார்கள். அதுபோல முத்தரசன் மற்றும் சில கட்சிகளும் தி.மு.க.வுடன் சேர்ந்து பலி கிடா ஆகிவிட்டார்கள் என்பதை நினைக்கும்போதுதான் பரிதாபமாக இருக்கிறது. இவ்வாறு ஜெயக்குமார் பதில் அளித்தார்.