‘ஜில்…ஜில்…’ நடனத்துடன் எம்.எல்.ஏ.,க்களுக்கு தடபுடல்
சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு, சசிகலா தரப்பினர், அழகிகளின் நடனத்துடன், விதவிதமான விருந்து அளித்து, உற்சாகப்படுத்தி வருகின்றனர். அத்துடன், ஒவ்வொருக்கும், தலா, 10 கோடி ரூபாய் தருவஉத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தக்க வைக்க…
அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கு, கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம், கடும் எதிர்ப்பு உள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல், பண பலத்தை பயன்படுத்தி, முதல்வராகி விட அவர் துடித்து வருகிறார். எளிதாக முதல்வராக நினைத்த சசிகலாவுக்கு, முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடியான செயல்பாடுகள், சிக்கலை ஏற்படுத்தி உள்ளன. இதனால் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, எப்படியும் தக்க வைக்க வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அழகிகளின் நடனம்:
இதனால், தங்கள் எம்.எல்.ஏ.,க்களை, நேற்று முன்தினம்(புதன் கிழமை), நான்கு பஸ்களில் ஏற்றிய சசிகலா தரப்பினர், அங்கும், இங்குமாக சுற்ற வைத்தனர். பின், இரவு, 11:00 மணிக்கு, கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரத்தை அடுத்த, கூவத்துாரில் உள்ள, ‘கோல்டன் பே’ சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். அங்கு, 101, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன், சசிகலாவின் உறவினர்களான, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் சென்று தங்கியுள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள், இரவு உல்லாசமாக பொழுது போக்க, கேரள அழகிகளின் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விதவிதமான மது வகைகளுடன், விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது.
தடபுடல்:
நேற்று(வியாழக்கிழமை) காலை, எம்.எல்.ஏ.,க்களுக்கு, இட்லி, தோசை, மசால் பூரி, இடியாப்பம், மட்டன் பாயா, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, வடை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மதியம், சைவ, அசைவ விருந்துக்கும், இயற்கை உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசைவ உணவில், மட்டன், சிக்கன், மீன், இறால் வகை உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. இப்படி உற்சாக மிகுதியில், எம்.எல்.ஏ.,க்கள் இருந்த நேரத்தில், அவர்களின், மொபைல் போன்களையும், சசிகலா உறவினர்கள் வாங்கி வைத்துள்ளனர். அவர்கள், வேறு யாருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
போதை:
நேற்று முன்தினம் இரவு முழுவதும் போதையில் மிதந்து, நேற்று அதிகாலையில், போதை சற்று தெளிந்து, ‘மொபைல் போன்’ கேட்ட, எம்.எல்.ஏ.,க்களுக்கும் வழங்கப்படவில்லை. அவர்களிடம், ‘கவலைப்படாதீர்கள்; வேண்டிய உதவி செய்கிறோம்’ என, சசி தரப்பு சமாதானம் செய்துள்ளது. அப்போது, ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வுக்கும், 10 கோடி ரூபாய் தரப்படும் என, உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், குறிப்பிட்ட தொகை, எம்.எல்.ஏ.,களின் வீடு அல்லது உறவினர்கள் வீடுகளில், உடனே ஒப்படைக்கப்படும் என, கூறியதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
12 எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் :
சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களில், 12 பேர் வெளியில் செல்ல விரும்பியுள்ளனர். அவர்களுக்கு, சசி உறவுகள் அனுமதி வழங்கவில்லை. உடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் உணவு சாப்பிடாமல், உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்கள், முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குண்டர் படை :
எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள விடுதியை சுற்றி, 120 வாட்டசாட்டமான, குண்டர் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கூட, அந்த வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும், அரை கி.மீ., துாரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டுகின்றனர்.
நன்றி : தினமலர்