கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ் – 19 பந்தில் அரைசதம் விளாசினார், கெய்ல்
வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 28.1 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் 418 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இங்கிலாந்து அணி இதில் அதற்கு நேர் மாறாக ஆடிய விதம் ஆச்சரியம் அளித்தது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
எளிய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், வழக்கம் போல் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை கும்மாளம் போட வைத்தார். இடைவிடாது பந்தை எல்லைக்கோட்டை நோக்கி தெறிக்க விட்ட அவர் 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அத்துடன் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்பு டேரன் சேமி 20 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது. அதை கெய்ல் முறியடித்தார். கெய்ல் 77 ரன்களில் (27 பந்து, 5 பவுண்டரி, 9 சிக்சர்) போல்டு ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதாவது 227 பந்துகள் மீதம் இருக்கையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கனியை பறித்தது. அதிக பந்துகள் எஞ்சியிருந்த வகையில் இங்கிலாந்தின் மோசமான தோல்வியாகவும் இது பதிவானது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இந்த தொடரில் மொத்தம் 39 சிக்சருடன் 424 ரன்கள் குவித்த கிறிஸ் கெய்ல் (135, 50, 162, 77 ரன்) தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் நாளை மறுதினம் செயின்ட் லூசியாவில் நடக்கிறது.
39 வயதில் 39 சிக்சர்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் மொத்தம் 39 சிக்சர்கள் நொறுக்கினார். தொடர் ஒன்றில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். வேறு எந்த வீரரும் 30 சிக்சரை கூட எட்டியதில்லை.
தொடர்நாயகன் விருது பெற்ற 39 வயதான கிறிஸ் கெய்ல் கூறுகையில், ‘வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இது தான் எனது கடைசி ஒரு நாள் தொடர் என்பதை அறிவேன். அதனால் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அதிரடியாக ஆடினேன். நாங்கள் விளையாடிய விதத்தின் மூலம் உலக கோப்பை கிரிக்கெட்டில் இப்போது எங்களுக்கு கொஞ்சம் மதிப்பு கிடைக்கும்.
39 வயதில் தொடர் நாயகன் விருதை பெற்று இருக்கிறேன். வாருங்கள் இளைஞர்களே, நான் செய்ததை பாருங்கள். அது மட்டுமின்றி 39 வயதில் 39 சிக்சர் என்பது அற்புதமான விஷயம். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் நான் நிறைய சிக்சர்கள் அடித்துள்ளேன். 60 வயதிலும் கூட என்னால் பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியும் என்று நினைப்பேன். அந்த மனநிலை ஒரு போதும் மாறாது. உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இன்னும் என்னால் ரன்கள் குவிக்க முடியும்’ என்றார்.