சிறுநீர், தலைமுடி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கலாம்: ‘எனது அற்புத யோசனைகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை’ – மத்திய மந்திரி நிதின் கட்காரி வேதனை
மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் நாக்பூர் மாநகராட்சி சார்பில் நடந்த புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான மேயர் விருது விழங்கும் விழாவில் கலந்து கொண்டு கலகலப்பாக பேசினார்
விழாவில் அவர் புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், ’இயற்கை கழிவுகளில் இருந்து உயிரி எரிபொருளை பிரித்து எடுக்கலாம். மனித சிறுநீர் கூட உயிரி எரிபொருளை தயாரிக்க பயன்படுகிறது. இதில் இருந்து அமோனியம் சல்பேட், நைட்ரஜன் ஆகியவற்றை தயாரிக்க முடியும்.
சிறுநீரில் இருந்து யூரியா உரம் தயாரிக்கலாம். இதற்காக சிறுநீரை சேமித்து வைக்க வேண்டும். நமக்கு யூரியா உரம் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. விமான நிலையங்களில் சிறுநீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். நாடு முழுவதும் சிறுநீரை சேமித்தால், நாம் யூரியாவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிறுநீரில் நிறைய இயற்கை வளங்கள் இருப்பதால், அதை வீணடிக்கக்கூடாது‘ என்றார்.
தனது சிறுநீரை சேமித்து வைத்து டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்துவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு நிதின் கட்காரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து தலைமுடியையும் உரமாக பயன்படுத்துவது குறித்து பேசிய நிதின் கட்காரி, ’மனித தலைமுடி கழிவில் இருந்து அமினோ ஆசிட்டை பிரித்தெடுக்க முடியும். அதனை உரமாக பயன்படுத்த முடியும். எனது பண்ணைகளில் இந்த உரத்தை பயன்படுத்துகிறேன். இதனால் 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ஆனால் தலைமுடி கழிவுகள் நாக்பூரில் போதிய அளவில் கிடைப்பதில்லை. திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் இருந்து 5 லாரி தலைமுடியை மாதந்தோறும் வாங்கினேன்‘ என்று தெரிவித்தார்.
இவ்வாறு ரசிக்கும் வகையில் பேசிய நிதின் கட்காரி திடீரென கடுப்பானார். ’எனது அனைத்து யோசனைகளும் அற்புதமானது. ஆனால் மற்றவர்கள் எனக்கு ஒத்துழைப்பதில்லை. இதற்கு மாநகராட்சி கூட உதவாது. காரணம், அரசில் இருப்பவர்கள் வண்டியில் பூட்டிய காளைகளை போல ஒரே பாதையில் நடந்து செல்ல பழகி விட்டனர். அங்கும், இங்கும் பார்ப்பதில்லை‘ என்று கூறினார்.
பிரதமர் மோடியை மனதில் கொண்டு அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வந்த நிதின் கட்காரி, தற்போது தன்னிடம் இருக்கும் அற்புதமான யோசனைகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பா.ஜனதாவில் நிதின் கட்காரி பெயர் பிரதமர் பதவிக்கு அடிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.