நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய் துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. இதல் மூவரது ஜாமீன் மனுக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர் 3 பேரும் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து முருகன், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், ஓராண்டாக சிறையில் உள்ள நிர்மலாதேவிக்கு தாமாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது?, அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தில்லை. அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 17.4.2018 முதல் சிறையில் உள்ளேன். இந்த வழக்குக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. என்னுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு உச்ச நீதிமன்றம் 12.2.2019-ல் ஜாமீன் வழங்கியுள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கினால், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.