குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்
என்ன அவசரமாக இருந்தாலும் லக்கேஜை மறக்கலாம், வேறு எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பெற்ற குழந்தையையே மறந்து போய் விமானத்தில் பறந்த பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா?
சவுதி அரேபிய விமானம் ஒன்று கடைசி கட்டத்தில் திரும்பி விமான நிலையத்துக்கே வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து பெண் ஒருவர் பதற்றத்தில் என் குழந்தை என் குழந்தை என்று கதறத் தொடங்கினார்.
அதாவது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு இவர் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார், விமானம் புறப்படும் வரை குழந்தை ஞாபகம் இல்லாமல் இருந்துள்ளார் இந்தத் தாய்!
இதனையடுத்து பைலட் ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூமுக்கு தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையம் திரும்பும் அனுமதி கோரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் பைலட், “கடவுள் நம் பக்கம் இருக்கிறார்… நாங்கள் திரும்பி வர முடியுமா என்ன? பயணி ஒருவர் அவர் குழந்தையை மறந்து விட்டுவிட்டு வந்து விட்டார்” என்று கேட்டார்.
உடனே, “உடனே திரும்புங்கள், இது எங்களுக்கு புதிதான ஒன்று” என்று ஆச்சரியமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் கூறியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
விமானம் வானில் எழும்பிய பிறகு தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பயணியின் ஆரோக்கிய கோளாறு காரணத்திற்காக மட்டுமே மீண்டும் உடனேயே தரையிறங்க அனுமதிக்கப்படும்.
இந்நிலையில் தாயும் சேயும் கடும் பதற்றங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்ததாக கல்ஃப் நியூஸ் கூறுகிறது.