போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதிக்க எந்த அடிப்படையும் இல்லை: அமெரிக்கா
எத்தியோப்பியாவில் கடந்த 10-ந்தேதி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகினர்.
இரு விமானங்களும் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளன. போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருகிறது.
எத்தியோப்பியா, சீனா, சிங்கப்பூர், இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.இதனிடையே, போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதற்காக மென்பொருளில் மாற்றம் செய்யவிருப்பதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை என்று அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக தலைவர் டேனியல் எல்வெல் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தற்போது வரை நாங்கள் செய்த ஆய்வுகளின் படி, செயல்திறன் அமைப்பில் எந்த பிரச்சினையும் தென்படவில்லை. எனவே, விமானத்தை பறப்பதற்கு தடை விதிப்பதற்கான எந்த அடிப்படையும் இல்லை. விபத்துக்குள்ளான எத்தியோப்பியா விமானம் 302 பற்றி எங்களின் ஆய்வுகளில், ஏதேனும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டால், அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக தக்க நடவடிக்கைஎடுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.