ரபேல் தீர்ப்பு: ராகுல் காந்தி கருத்து ‘‘ஊழல் நடந்திருப்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது’’
ரபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீது புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
இது பற்றி அவர் அமேதியில் கருத்து தெரிவிக்கையில், ‘‘ரபேல் பேரத்தில் சில வகையிலான ஊழல் நடந்திருக்கிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. அனில் அம்பானிக்கு மோடி ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார்’’ என குறிப்பிட்டார்.
அத்துடன், ‘‘சுப்ரீம் கோர்ட்டு நீதி வழங்கி உள்ளது. ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தன்னை குற்றமற்றவர் என கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு இதில் தெளிவுபடுத்தி உள்ளது. விசாரணையை தொடங்கி இருக்கிறது’’ என கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்றார்.
இதையொட்டி அவர் குறிப்பிடுகையில், ‘‘ பிரதமர் மோடி, தான் விரும்பும் வரை ஓடிக்கொண்டிருக்கலாம். பொய் சொல்லலாம். ஆனால் உடனேயோ அல்லது பின்னரோ உண்மை வெளியே வரும். ரபேல் ஊழலின் எலும்புக்கூடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வருகின்றன. அதை மறைப்பதற்கு என்று அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் இல்லை’’ என்றார்.
மேலும், ‘‘ இதில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விசாரணை நடக்கப்போகிறது’’ என கூறி உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ‘‘ ரபேல் பேரத்தில், தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில், மிகப்பெரிய பிரச்சினைகளை, ஊழல்களை மறைக்க பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள், தோல்வி கண்டுள்ளன. பாரதீய ஜனதா கட்சி வெளிப்படுத்தப்பட்டு விட்டது’’ என டுவிட்டரில் கூறி உள்ளார்.
மேலும், ‘‘ நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பிரதமர் பொய்கள் பேசி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராணுவ மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றும் அதில் கூறி இருக்கிறார்.
டெல்லி முதல்–மந்திரியும் ஆம் ஆத்மி கட்சித்தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘ரபேல் பேரத்தில் தான் எந்த குற்றமற்றவர் என சுப்ரீம் கோர்ட்டால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறி வந்தார். சுப்ரீம் கோர்ட்டு இப்போது வழங்கி உள்ள தீர்ப்பு, ரபேல் பேரத்தில் மோடி திருடி இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது’’ என கூறி உள்ளார்.
மேலும், ‘‘ பிரதமர், நாட்டின் பாதுகாப்பு படையை ஏமாற்றி உள்ளார். குற்றத்தை மறைக்க சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழிநடத்தி உள்ளார்’’எனவும் குறிப்பிட்டு உள்ளார்.