இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு கவுரவம்
‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ‘விஸ்டன்’ பத்திரிகை இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி வீரர்-வீராங்கனை பட்டியலை நேற்று வெளியிட்டு இருக்கிறது. 5 பேர் கொண்ட இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, இங்கிலாந்து அணி வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ரோரி பர்ன்ஸ், இங்கிலாந்து பெண்கள் அணி வீராங்கனை டாமி பீமோன்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் விராட்கோலி இந்த பட்டியலில் தொடர்ந்து 3-வது முறையாக இடம் பிடித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டில் விராட்கோலி 3 வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து 11 சதம் உள்பட 2,735 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். அவரது டெஸ்ட் பேட்டிங், குறிப்பாக இங்கிலாந்து தொடரில் வியக்கவைக்கும் வகையில் இருந்தது என்று ‘விஸ்டன்’ பத்திரிகை பாராட்டி இருக்கிறது. பெண்கள் ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை மந்தனாவும், 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும் முறையே சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.