ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப்பை வீழ்த்தி கடைசி பந்தில் மும்பை அணி வெற்றி ராகுல் சதம் வீண்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் மும்பை அணி திரில் வெற்றியை ருசித்தது.
புதிய கேப்டன்
8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. மும்பை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அந்த அணியில் சித்தேஷ் லாட் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த மும்பை பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
வலுவான தொடக்கம்
இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடிய இவர்கள் முதல் 4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே எடுத்தனர். அதன் பிறகு வாணவேடிக்கை ஆரம்பித்தது. 5-வது ஓவரில் பெரேன்டோர்ப்பின் பந்து வீச்சில் கெய்ல் 3 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். லோகேஷ் ராகுலும் அதிரடி காட்ட, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 10.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. விசுவரூபம் எடுத்த இந்த ஜோடி ஸ்கோர் 116 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த கெய்ல் 63 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
கெய்ல் வெளியேறியதும் அடுத்த சில ஓவர்களில் ரன்வேகம் தளர்ந்தது. டேவிட் மில்லர் 7 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், சாம் குர்ரன் 8 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 9 ரன்களுக்கு மேலாக எகிறிய ரன்ரேட்டும் அதற்கு கீழ் வந்தது.
ராகுல் சதம்
இந்த சூழலில், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல் கடைசி 2 ஓவர்களில் பின்னியெடுத்தார். 19-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் ராகுல் 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் சாத்தினார். தொடர்ந்து பும்ராவின் கடைசி ஓவரில் ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கிய ராகுல் ஆட்டம் நிறைவடைய 2 பந்து எஞ்சியிருந்த போது ஐ.பி.எல்.-ல் தனது கன்னி சதத்தை எட்டினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 100 ரன்களுடனும் (64 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), மன்தீப்சிங் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பொல்லார்ட் சிக்சர் மழை
பின்னர் 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் சித்தேஷ் லாட் 15 ரன்னிலும், குயின்டான் டி காக் 24 ரன்னிலும் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் (21 ரன்), இஷான் கிஷன் (7 ரன்), ஹர்திக் பாண்ட்யா (19 ரன்), குருணல் பாண்ட்யா (1 ரன்) உள்ளிட்டோரும் தாக்குப்பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் மட்டும் போராடினார். அவர் சிக்சர் மழை பொழிய ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்பூத் வீசினார். அவர் நோ-பாலாக வீசிய முதல் பந்தை பொல்லார்ட் சிக்சராக்கினார். மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். 2-வது பந்தில் பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த 3 பந்துகளில் ராஜ்பூத் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவையாக இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து திரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.
மும்பை வெற்றி
மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஏற்கனவே மொகாலியில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் அடைந்த தோல்விக்கும் இதன் மூலம் பழிதீர்த்துக் கொண்டது. 7-வது லீக்கில் ஆடிய பஞ்சாப்புக்கு இது 3-வது தோல்வியாகும்.