Breaking News
மேலும் 2 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: இலங்கையில் அவசரநிலை பிரகடனம் – சதிகாரர்கள் 29 பேரை கைது செய்து விசாரணை

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 215 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மேலும் 75 பேர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை நேற்று 290 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருந்த இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் இழந்து இருக்கிறார்கள்.

பலியானவர்களில் 7 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்கள் லட்சுமண கவுடா ரமேஷ், லட்சுமி நாராயண், சந்திரசேகர், கே.ஜி.அனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா, நாகராஜ், ரஜினா என அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

இவர்களில் லட்சுமண கவுடா ரமேஷ், லட்சுமி நாராயண், சந்திரசேகர், கே.ஜி.அனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய 5 பேரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்கள். நாகராஜ் காங்கிரசைச் சேர்ந்தவர் ஆவார்.

தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில், கொழும்பு நகரில் பேட்டா பகுதியில் உள்ள மத்திய பஸ்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 75 டெட்டனேட்டர் குண்டுகளை, போலீசார் கைப்பற்றினார்கள்.

இதேபோல் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு மையத்துக்கு செல்லும் சாலை ஓரம் ஒரு வெடிகுண்டு சிக்கியது. அது, 6 அடி நீளம் கொண்ட சக்தி வாய்ந்த ‘பைப்’ வெடிகுண்டு ஆகும். அந்த வெடிகுண்டை இலங்கை விமானப்படை கைப்பற்றி, பாதுகாப்பான இடத்தில் செயலிழக்கச் செய்தது.

நாட்டை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பற்றி ஆலோசிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்தது.

அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போலீசுக்கு அதிக அதிகாரம்

இந்த அவசரநிலை, நிபந்தனைகளுடன் கூடியதாக இருக்கும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதே இதன் நோக்கம். மற்றபடி, கருத்து சுதந்திரத்தை இது கட்டுப்படுத்தாது. பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் சூழ்நிலையை கையாள போலீசுக்கு அதிகமான அதிகாரம் அளிக்கப்படும்.

இந்த தாக்குதலை நடத்த உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் உதவி புரிந்துள்ளதை உளவு அமைப்புகள் சுட்டிக் காட்டி உள்ளன. எனவே, இந்த பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச உதவியை அதிபர் கோருவார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் நேற்றுமுன்தினம் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலையில் இந்த ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின. இருப்பினும் பள்ளிகளுக்கு இன்றும், நேற்றும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

மேலும், இலங்கை முழுவதும் இன்று துக்க நாளாக கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

இருப்பினும், போலீசார் அதிரடியாக செயல்பட்டு, சந்தேகத்தின்பேரில் நேற்றுமுன்தினம் 13 பேரையும், நேற்று 16 பேரையும் கைது செய்தனர். இவர்களில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற வேனின் டிரைவரும் அடங்குவார். அந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார். மேல்விசாரணைக்காக, 29 பேரும் சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க இலங்கை ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே மறுத்து விட்டார். “அவர்களை தியாகிகள் ஆக்க வேண்டாம், அவர்களுக்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், கைதானவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்துவதற்கு முன்பு 3 மாதங்களாக கொழும்பு புறநகரான பாணதுராவில் பயங்கரவாதிகள் வசித்து வந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 7 மனித வெடிகுண்டுகள் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை அரசு தடயவியல் துறை கண்டுபிடித்து உள்ளது. 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள், ஒரு வீடு என 7 இடங்களில் இந்த மனித வெடிகுண்டுகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தடயவியல் துறை கூறி உள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, 3 பேர் கொண்ட குழுவை இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று நியமித்தார்.

குழுவின் தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விஜித் மலால்கோடா இருப்பார். முன்னாள் போலீஸ் ஐ.ஜி. இலங்காகூன், சட்டம்-ஒழுங்கு முன்னாள் செயலாளர் படமாஸ்ரீ ஜெயமன்னே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொடர் குண்டுவெடிப்பு குறித்து இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று விரிவான பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க விட மாட்டோம். எல்லா வகையான பயங்கரவாதத்தையும் அழிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அமைதியான சூழ்நிலை திரும்ப முப்படைகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சந்தேகத்துக்குரியவர்களை பிடிக்க உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் முழு அளவிலான விசாரணை நடத்தப்படும். இந்த நாசவேலையில் சர்வதேச தொடர்பு உள்ளதா? என்பதை அறிய விசாரணை நடத்தப்படும்.

பயங்கரவாத தாக்குதல் அபாயம் குறித்த தகவலை உளவு அமைப்புகள், உரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், அதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதுபற்றியும் விசாரிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். தாக்குதல் நடந்த 2 தேவாலயங்கள், அரசு பணத்தில் புனரமைக்கப்படும்.

இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, பயங்கரவாதத்தை ஒடுக்க ஒத்துழைப்பதாக உறுதி அளித்தனர். இவ்வாறு ரனில் விக்ரமசிங்கே கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.