Breaking News
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரமா? – நேரில் விளக்கம் அளிக்க வக்கீலுக்கு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் செக்ஸ் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வக்கீல் ஒரு பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அவர், “தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருகிறது. புகார் கூறியவர் தரப்பில் நான் ஆஜராக விரும்பினேன். ஆனால் வழக்கு தொடர்பாக அஜய் என்பவர் என்னிடம் வந்து தெரிவித்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. உடனே புகார் கூறியவரை (பெண்ணை) சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அஜய் சம்மதிக்கவில்லை. நான் திட்டவட்டமாக மறுத்தேன். உடனே தலைமை நீதிபதி மீது வழக்கு போட ரூ.50 லட்சம் லஞ்சம் தர முன்வந்தார். பின்னர் அந்த தொகையை ரூ.1½ கோடி அளவுக்கு உயர்த்தினார். உடனே நான் அவரை வெளியே போகுமாறு கூறி விட்டேன். தலைமை நீதிபதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

இதை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நாளை (இன்று) வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் நேரில் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.