வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காகவிவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம்ராகுல் காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
5 ஆண்டுகளுக்கு முன்பு, ‘நல்ல நாள் வரும்‘ என்ற கோஷத்தை எழுப்பினார்கள். ஆனால், இப்போது ‘காவலாளியே திருடன்‘ என்ற கோஷம்தான் எங்கும் ஒலிக்கிறது. அந்த அளவுக்கு 5 ஆண்டுகளும் மக்களுக்கு மோடி அநீதி இழைத்துள்ளார்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை ஏழைகள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் பணத்தை பறிக்கும் திட்டங்கள் ஆகும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ‘நியாய்‘ திட்டம் ஏழைகளுக்கு பலன் அளிக்கும்.
22 லட்சம் வேலை
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்படும். ஆண்டுக்கு 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும். முதல் 3 ஆண்டுகளில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு அனுமதி பெறத் தேவையில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாததற்காக எந்த விவசாயியும் சிறையில் தள்ளப்பட மாட்டார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.