ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு : இங்கிலாந்து ராணுவ மந்திரி நீக்கம்
சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமாக ஹூவாய் மூலமாக இங்கிலாந்தில் 5 ஜி என்னும் 5-ம் தலைமுறை தொலை தொடர்பு சேவையை வழங்க பிரதமர் தெரசா மேவின் அரசின் திட்டமிட்டது.
இந்த நிலையில், இந்த திட்டம் குறித்த அரசின் உயர்மட்ட ரகசிய தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வாயிலாக கசிந்ததாக செய்திகள் பரவின. இது தொடர்பாக ராணுவ மந்திரி கவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்தநிலையில் அரசின் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில், கவின் வில்லியம்சன்னை, பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து நீக்கினார். அதனை தொடர்ந்து, பென்னி மோர்டன்ட் புதிய ராணுவ மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ளார். இதற்கிடையில் மந்திரிசபையின் செயலாளரும், ராணுவ பாதுகாப்பு ஆலோசகருமான சர் மார்க் செட்வில், ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளார்.
எனினும் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் கவின் வில்லியம்சன், இது பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.