Breaking News
ரபேல் சீராய்வு மனு மீது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல்

ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்தது.

அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த நாளில், ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், சீராய்வு மனுவுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு கூறி இருப்பதாவது:-

மனுதாரர்களின் சீராய்வு மனு பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நாட்டின் எதிரிகள் கையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசத்தின் பாதுகாப்பே அபாயத்தில் உள்ளது.

மனுதாரர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், தேச பாதுகாப்புக்கு முக்கியமானவை. ரபேல் விமானங்களின் போர்த்திறன் சம்பந்தப்பட்டவை. அவற்றை மத்திய அரசின் அனுமதியோ, ஒப்புதலோ இல்லாமல் நகல் எடுத்து, சீராய்வு மனுவுடன் இணைத்த சதிகாரர்கள், திருட்டு குற்றம் இழைத்துள்ளனர்.

இச்செயல், நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், வெளிநாடுகளுடனான நட்புறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆவணங்களை மத்திய அரசு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால், மனுதாரர்கள் இவற்றை ரகசியமாக வெளியிட்டதன் மூலம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளுக்கு குந்தகம் விளைவித்து இருக்கிறார்கள்.

தேச பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான இந்த விஷயம் குறித்து மத்திய அரசு நடத்திய உள்மட்ட ரகசிய ஆலோசனை பூர்த்தி அடையாமல் இருந்தது. அதை மட்டும் தேர்வு செய்து வெளிப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

தற்போது மத்திய அரசு மேலும் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளது. அதில் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. மத்திய தணிக்கைதுறை விளக்கத்தின் மூலம் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. முந்தைய ஒப்பந்தத்தை விட தற்போதைய ஒப்பந்தத்தில் 2.86 சதவீத விலைக்குறைவு என மத்திய தணிக்கை வாரியம் கூறி உள்ளது. 2018 டிச.14-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே.

மீடியாக்களில் வெளியான பகுதி தகவல்களை அடிப்படையாக கொண்டு மட்டும் மறு ஆய்வு செய்யக்கூடாது. 36 ரபேல் விமானம் வாங்கிய ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.