ஒடிசாவில் பானி புயலால் வீடு சேதம் கழிவறையில் குடும்பத்துடன் வசிக்கும் முதியவர்
ஒடிசா மாநிலத்தை பானி புயல் கடந்த 3-ம் தேதி தாக்கியது. புயல், கனமழையால் பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுடைய வாழ்விடங்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது. மாநில அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒடிசா மாநிலம் பெரும் இழப்பில் இருந்து மீண்டுவர கூடுதல் காலம் பிடிக்கும். பொருளாதார இழப்பும் அதிகமாக நேரிட்டுள்ளது. பெரும்பாலானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
கேந்தரபார்தா மாவட்டம் ராகுதிபூர் கிராமத்தில் கிரோத் ஜெனா (வயது 58) என்ற முதியவர் வீடு இல்லாத காரணத்தினால் தன்னுடைய மனைவி, இரு மகள்களுடன் அங்குள்ள கழிவறையில் வசித்து வருகிறார். ஜெனா பேசுகையில், “புயல் என்னுடைய வீட்டை அழித்துவிட்டது. ஆனால் கழிவறை என்னை காப்பாற்றியுள்ளது. எங்கு போக முடியாத நிலை உள்ளது. எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஒதுக்கப்பட்ட கழிவறை இப்போது என்னுடைய வீடாகியுள்ளது.
இங்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்க வேண்டியது இருக்கும் என்பது தெரியவரவில்லை. புயல் என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. என்னுடைய வீட்டை மீண்டும் கட்டமைக்க எந்த ஒரு வசதியும் கிடையாது. அரசு வீட்டை அமைத்து தரும் என காத்திருக்கிறேன். அதிகாரிகள் எனக்கு உதவி தொகையை வழங்கியுள்ளார்கள். நாங்கள் இப்போது கழிவறையில் வசிக்கிறோம். அரசிடம் வீடு கட்டிதரும்படி கேட்டுக் கொண்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். ஜெனாவிற்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.