பயங்கரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு: இலங்கை பள்ளி முதல்வர், ஆசிரியர் கைது
இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கம் ஈடுபட்டது தெரிய வந்தது. முகமது ஜக்ரான் ஹசிம் என்ற பயங்கரவாத தலைவர் மூளையாக செயல்பட்டதும், ஷாங்கிரி லா ஓட்டலில் அவரே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி மடிந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அதவீரவேவா நகரில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வரும், ஆசிரியரும் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடனும், முகமது ஜக்ரான் ஹசிமுடனும் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக இலங்கை அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஹாரோபதானா நகரில் அவர்கள் இருவரையும் அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். பள்ளி முதல்வர் பெயர் நூர் முகமது அட்டு உல் (வயது 56). ஆசிரியர் பெயர் அஜிபுல் ஜப்பார் (47) ஆகும். அவர்கள் ஹாரோபதானா நகரில் வசித்து வருகிறார்கள்.
இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.