விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களை அமைக்க கூடாதுஅரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையபாளையம் என்ற இடத்தில் மாதானம் முதல் மேமாத்தூர் வரை கெயில் எண்ணெய் குழாய் பாதை அமைப்பதால் அப்பாதை நெடுகிலும் உள்ள 30 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்கள் பாதிக்கப்படும். இதனால் பல்லாயிரம் விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள்.
ஏற்கனவே, காவிரி பாசன மாவட்டங்களில் 5,000 சதுர கி.மீ பரப்பளவில் 6 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி பெட்ரோலியம் கெமிக்கல் முதலீட்டு மண்டலம், 600 ஏக்கர் பரப்பளவில் நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என விவசாயத்தை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய்ப்பாதை திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது.
கச்சா எண்ணெய்யை கொண்டு செல்வதற்காக மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய் பாதை அமைப்பது விவசாயத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். எனவே, இனியாவது விழித்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட மத்திய அரசு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் ஊர் மக்கள் திரண்டு எதிர்ப்புத்தெரிவித்தும், தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் தமது விருப்பம் போல விளைநிலங்களைச் சீரழிக்கும் பணியைச் செய்து வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கண்முன்னே அழிவதைப் பார்த்து விவசாயிகள் கதறி அழுது கண்ணீர் வடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்குத் தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டாவில் பயிர் இருக்கிற வயல்களை அழித்து எரிவாயு குழாய் பதிக்கிற வேலைகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மேற்கொள்ளப்படும் மனசாட்சி அற்ற இந்த பாதகத்தை எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்த பணியை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். காவல்துறையை வைத்துக்கொண்டு இந்த கொடுமையை அரங்கேற்றி விடலாம் என்ற ஆணவத்தில் செயல்பட்டால், வருகிற 23-ந் தேதிக்கு பிறகு இதற்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை துரோக கும்பல் மறந்து விடக்கூடாது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் உள்பட பலர் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.