அதிவேகத்தில் பல்டியடித்த பிஎம்டபிள்யூ கார்… 3 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்!
அதிவேக கார் விபத்துக்கள் தொடர்கதையாகிவிட்டதையும், சாலை விபத்துக்களில் இளைஞர்களே அதிகம் உயிரிழப்பதாகவும் நேற்று ஒரு செய்தியை பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், சென்னையில் அதிவேகத்தில் சென்ற பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கிய படங்களை எமது வாசகர் ஹரிபிரசாத் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விபத்திலும் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்த மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 7.15 மணியளவில் நடந்த இந்த கோர விபத்து மூன்று எஞ்சினியர்களின் உயிரை பலிவாங்கி உள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டியவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.
விபத்தில் சிக்கியவர்கள் திண்டிவனத்தை சேர்ந்த அரவிந்தன்[23], அவரது நண்பர்கள் மித்தின் மனோகர்[22], தீபக்[22] மற்றும் பிரபு[22] என தெரிய வந்துள்ளது. இவர்களில் பிரபு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். மற்ற மூவரும் பொறியியல் பட்டதாரிகள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், நண்பரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 4 பேரும் பிஎம்டபிள்யூ காரில் சென்றுள்ளனர். காரை பிரபு ஓட்டியுள்ளார். அவர் அதிவேகத்தில் காரை செலுத்தியதாக தெரிகிறது. வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்லும்போது வடக்கு மலையம்பாக்கம் என்ற இடத்தில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சாலையில் பல்டியடித்த அந்த கார் சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் அரவிந்தன், மித்தின் மனோகர், தீபக் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பிரபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் மிக மோசமாக உருக்குலைந்தது. ஓட்டுனர் பக்கம் இருந்த ஏர்பேக் மட்டும் விரிந்ததால், பிரபு உயிர் பிழைத்ததாக தெரிகிறது. மற்றவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு மிக்க காராக இருந்தாலும் கூட அதிவேகம் என்பது எந்தளவு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்பது இந்த விபத்து மூலமாக உணர்ந்து கொள்ளலாம்.
முன்னால் சென்ற வாகனத்தை அதிவேகத்தில் முந்த முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தெரிகிறது. இதுபோன்ற ஓவர்ஸ்பீடு விபத்துக்களில் இளைஞர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Read more at: http://tamil.drivespark.com/off-beat/bmw-car-torn-apart-high-speed-crash-chennai/slider-pf71877-011925.html