கவனத்தை ஈர்த்து வேலையை பெற ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்களை ‘ஹேக்’ செய்த சிறுவன்
பிரபல கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் பணிக்கு சேருவதற்காக, அந்நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை 13 வயது சிறுவன் ‘ஹேக்’ செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு, மெல்போர்னை சேர்ந்த தனது நண்பனுடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தான். எனினும் ஹேக் நடவடிக்கையால் பெரிய அளவில் இழப்பு ஏதும் ஏற்படாததால் ஆப்பிள் நிறுவனம் இதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் 2017-ம் ஆண்டு அந்த சிறுவன் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தான். அதனை தொடர்ந்து, அந்நிறுவனம் அமெரிக்க மத்திய புலனாய்வு போலீசாரின் உதவியை நாடியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் சிறுவன் பிடிப்பட்டான். இது தொடர்பாக அடிலெய்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில், அண்மையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவனின் தரப்பில் ஆஜரான வக்கீல், ஹேக் செய்து கவனத்தை ஈர்த்தால், அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும் என தவறாக நம்பி, மாணவர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், ஹேக்கிங்கின் விபரீதங்களை உணராமல் செய்துவிட்டதாகவும் வாதாடினார். இதையடுத்து, இந்த வழக்கில் சிறுவனுக்கு எந்த தண்டனையும் வழங்காமல், 500 அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.35 ஆயிரம்) பிணைத் தொகை செலுத்தி, சிறுவனின் 9 மாத கால நன்னடத்தைச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.