500 ரன்களை எட்டும் முதல் அணியாக இருப்போம்’ வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் நம்பிக்கை
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 500 ரன்களை தொட்டதில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆனால் இந்த உலக கோப்பையில் 500 ரன்கள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சமீப காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்து வெற்றி கண்ட பிறகு அந்த ஆட்டத்தில் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் 500 ரன்கள் சாத்தியமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷாய் ஹோப், ‘ஏதாவது ஒரு தருணத்தில் 500 ரன் மைல்கல்லை லட்சியமாக கொண்டு அதை அடைய முயற்சிப்போம். 500 ரன்களை எட்டும் முதல் அணியாக இருப்பது நிச்சயம் சிறப்பான விஷயமாகும். அதை செய்யக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன்கள் எங்களிடம் இருக்கிறார்கள்’ என்றார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெய்ட் கூறுகையில், ‘இந்த இலக்கை எட்டக்கூடிய திறமை வெஸ்ட் இண்டீசிடம் இருக்கிறதா என்று என்னை கேட்டால் உறுதியாக என்று பதில் அளிப்பேன்’ என்றார்.