நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு
‘நீட்’ தேர்வு முடிவு கடந்த 5-ந் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகம் ஆகும்.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 929 பேர் தேர்வு எழுதியதில், 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 3 பேரும் (அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்), 300 மதிப்பெண்ணுக்கு மேல் 29 பேரும் எடுத்து இருக்கின்றனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 25 பேரும் அடங்குவார்கள்.
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த சாவித்திரி வித்யாசலா இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.கீர்த்தனா 720-க்கு 453 மதிப்பெண் பெற்று இருந்தார்.
இவருக்கு மருத்துவ இடம் கிடைக்கும். அதற்கு அடுத்தபடியாக 2-வது மதிப்பெண்ணாக 440 எடுத்த மாணவருக்கு இடஒதுக்கீடு அடிப்படையிலும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், 404 மதிப்பெண் எடுத்த மற்றொரு மாணவருக்கும் இடஒதுக்கீடு அடிப்படையில் சுயநிதி கல்லூரியில் தான் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து இருக்கும் மாணவர்களில் இடஒதுக்கீடு (எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.(ஏ)) அடிப்படையில் 3 பேருக்கு மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், 200 முதல் 300 மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களில் 250-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களில் ஒன்றிரண்டு பேருக்கு அதே இடஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கலாம். மொத்தத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,583 பேரில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
கடந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,344 பேரில் 7 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது. அதேநிலை தான் இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு முகமையின் தகவலின்படி, தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 300 மதிப்பெண்ணுக்கு மேல் 14 ஆயிரத்து 443 பேரும், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 5 ஆயிரத்து 634 பேரும் எடுத்து இருக்கின்றனர். அதிலும் 60 சதவீதம் மாணவர்கள் 2-வது மற்றும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்து இருக்கிறது.
இந்த முறை நீட் தேர்வு மாணவ-மாணவிகள் பலர் நல்ல மதிப்பெண்களை பெற்று இருக்கின்றனர். இதன் காரணமாக தான் மருத்துவ இடத்தை பெறுவதில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.