5 நாட்களில் 3 லட்சம் பேர் நேரில் சந்திப்பு: ‘மிஸ்டு கால்’ மூலம் 35 லட்சம் பேர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு
மிஸ்டு கால் மூலம் 35 லட்சம் பேரும், 5 நாட்களில் நேரில் சந்தித்து 3 லட்சம் பேரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். தனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு ஜெயலலிதா பாணியில், ‘வாய்ஸ் கால்’ மூலம் ஓ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
பெருகும் ஆதரவு
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களும், இளைஞர்களும் தன்னை எவ்வளவோ கேலி, கிண்டல் செய்து விமர்சித்தாலும், அதனை பொருட்படுத்தாமல் அவர்களுடைய கோரிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி கொடுத்தார்.
வர்தா புயல், கிருஷ்ணா நதிநீர், கடலில் டீசல் படிமம் படிந்தது போன்ற பிரச்சினைகளில் திறம்பட பணியாற்றினார். இதன் மூலம் அவருக்கு மக்களிடையேயும், இளைஞர்கள் மத்தியிலும் நற்பெயர் கிடைத்தது.
இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள் என்று தெரிவித்ததையடுத்து அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
‘மிஸ்டு கால்’ எண்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சமூக வலைத்தளங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை வசைபாடியவர்களும், இன்று அவரை புகழ்ந்து, பாராட்டி தள்ளுகிறார்கள். இந்தநிலையில் இளம் தலைமுறையினரிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை மேலும் உயர்த்தும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தகவல் தொடர்பு அணி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக 9289222028 என்ற எண்ணில் ‘மிஸ்டு கால்’ கொடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில் 35 லட்சத்துக்கும் அதிகமான ‘மிஸ்டு’ கால்கள் வந்துள்ளதாகவும், இதில் 3 லட்சம் ‘மிஸ்டு கால்கள்’ வெளிமாநிலங்களில் இருந்தும், 2 லட்சம் மிஸ்டு கால்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் இருந்தும் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேரில் 3 லட்சம் பேர்
கடந்த 8-ந்தேதி முதல், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து செல்கின்றனர். இவ்வாறு ஆதரவு தெரிவிக்க வருவோர்களுடைய பெயர், ஊர் விபரம் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
அதன்படி, கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரில் ஆதரவு அளித்துள்ளதாக கம்ப்யூட்டர் பதிவில் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா பாணியில் நன்றி
தனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தனது குரல் பதிவை(வாய்ஸ் கால்) வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த குரல் பதிவு உலா வருகிறது. அதில், ‘நான் ஓ.பி.எஸ்.பேசுகிறேன். மிஸ்டு கால் மூலம் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. புரட்சி தலைவி அம்மா வழியில் மக்களுக்கு பணியாற்ற ஆதரவு அளித்துள்ளர்கள். அம்மா வழியில் மக்கள் பணி தொடரும். என்று ஓ.பன்னீர்செல்வத்தின் குரல் பதிவு இடம் பெற்றுள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடையே குரல் பதிவு மூலம் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதே பாணியில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் குரல் பதிவு மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார்.
தொண்டர்கள், பொதுமக்களிடம் 2¼ மணி நேரம் நின்றபடி வாழ்த்து பெற்ற ஓ.பன்னீர்செல்வம்
சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு ஆதரவு தெரிவிக்க வருவோர்களை அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியே வந்து ஓ.பன்னீர்செல்வம் கைக்குப்பி வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று அவருக்கு வாழ்த்துக் கூறவும், ஆதரவு அளிப்பதற்குமான கூட்டம் அதிகம் இருந்தது.
தொண்டர்கள், மக்கள் உணர்வுகளை புரிந்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 4.50 மணி முதல் இரவு 7 மணி வரை 2¼ மணி நேரம் நின்றபடி சற்றும் சோர்வடையாமல் அவர்களை சந்தித்தார். வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் பணிவுடனும், இன்முகத்துடனும் வரவேற்று கைகுலுக்கினார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார். குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சினார்.
பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் பலர் வாழ்த்துக் கூறினர். பெண் ஒருவர் சாய்பாபா சிலையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு அன்பு பரிசாக வழங்கினார். ஆந்திராவில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு கிரீடம் போன்று தலைப்பாகை அணிவித்திருந்தனர்.
நன்றி : தினத்தந்தி