8 நாட்களுக்கு முன்பு மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு – பயணம் செய்தவர்கள் கதி என்ன?
13 பேருடன் 8 நாட்களுக்கு முன்பு மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாசலபிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை கண்டறிய முயற்சிகள் நடக்கின்றன.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஒன்று, கடந்த 3-ந் தேதி மதியம் 12.27 மணிக்கு அசாம் மாநிலம், ஜோர்கட் விமானப்படை நிலையத்தில் இருந்து அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளம் நோக்கி புறப்பட்டது.
இந்த விமானத்தில், 6 விமானப்படை அதிகாரிகள், 5 வீரர்கள் மற்றும் இருவரும் பயணம் செய்தனர். மதியம் 1.30 மணியளவுக்கு விமானம், மென்சுகா போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் சேரவில்லை. அந்த விமானம் மாயமானது.
மதியம் 1 மணிக்கு அந்த விமானம் கட்டுப்பாட்டு அறை யுடனான தொடர்பை இழந்தது. ரேடார் திரையில் இருந்தும் மறைந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. இப்படி தொடர்பு இழந்து போகிற விமானங்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்கி விடுவது இயல்பு.
இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை உடனடியாக சி-130 மற்றும் ஏஎன்-32 ரக விமானங்கள் தலா ஒன்றையும், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டையும், இந்திய ராணுவ ஏ.எல்.எச். ஹெலிகாப்டர்களையும் ஈடுபடுத்தியது.
இந்திய ராணுவத்தினரும், இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினரும் மாயமான விமானத்தை தேடும் பணியில் இணைந்து செயல்பட்டனர்.
இந்திய கடற்படையின் தொலைதூர கடல்சார் உளவு விமானம் பி-8ஐயும், அதி நவீன தேடுதல் சாதனங்களுடன் ஜோர்கட் மற்றும் மென்சுகா பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காடுகளில் தேடும் பணியில் ஈடுபட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவும் கேர்ட்டோசேட், ரிசாட் செயற்கைகோள்களை இந்தப்பணியில் ஈடுபடுத்தியது.
8 நாட்கள் தேடல் பணிக்கு பின்னர், மாயமான விமானத்தின் பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலம், சியாங் மாவட்டத்தின் லிபோ கிராமத் தில் இருந்து 16 கி.மீ. வடக்கே நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள் ளன. இதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் கதி என்ன, யாரேனும் உயிர் தப்பினரா என்பது குறித்த தகவல்களை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் இந்திய விமானப்படை கூறுகிறது.
ஏஎன்-32 ரக விமானம் காணாமல் போவது ஒன்றும் புதிது இல்லை. ஏற்கனவே 2016-ம் ஆண்டு சென்னையில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்டு சென்றபோது இதே ரக விமானம் ஒன்று மாயமானது; அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் பயணம் செய்தவர்கள் இறந்து போனதாக கருதப்பட்டு விட்டது.
2009-ம் ஆண்டு ஜூன் மாதம் ரிஞ்சி மலைப்பகுதியில் இதே ரக மற்றொரு விமானம் மாயமானது, அதில் பயணம் செய்த ராணுவத்தினர் 13 பேர் பலியாகினர்.
இதேபோன்று 1992, 1999 மற்றும் 2000-ம் ஆண்டுகளிலும் இந்த ஏஎன்-32 ரக விமானங்கள் காணாமல் போய் விபத்துக்குள்ளானது தெரியவந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.