டிரம்புக்கு சவாலா? வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு சவால் விடும் வகையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, கடந்த 2006ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா சபையும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது. அந்நாட்டின் வடக்கு பியோன்கன் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.55 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை எந்த மாதிரியானது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை என தென் கொரியா கூறி உள்ளது.
அமெரிக்க அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, வடகொரியா நடத்தியிருக்கும் முதல் ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் ராணுவ வீரர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் வரிசையில், சீனா முதலிடத்தையும், அமெரிக்கா 2வது இடத்தையும், இந்தியா 3வது இடத்தையும் பிடித்துள்ளன. சின்ன நாடாக இருந்தாலும், ராணுவ வீரர்கள் எண்ணிக்கையில் வடகொரியா 4வது இடத்தில் உள்ளது. இந்நாட்டு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 12.10 லட்சம்.
நன்றி : தினகரன்