நெல்லை முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது – பரபரப்பு தகவல்கள்
நெல்லை மாநகராட்சியில் மேயராக பதவி வகித்தவர் உமாமகேசுவரி. இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்.
இவருடைய கணவர் முருகசங்கரன். இவர்கள் மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த முன்னாள் மேயர் உமாமகேசுவரி, முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்து இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படுகொலை சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வந்தனர். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால் வடமாநில கொள்ளை கும்பலுக்கு இந்த கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர். ஆனால், அதில் துப்பு துலங்கவில்லை.
கொலை நடந்த வீட்டில் சோதனை நடத்திய தடயவியல் நிபுணர்கள் கொடுத்த அறிக்கையில், போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதாவது, கொலையாளிகள் உமாமகேசுவரிக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும், நகை, பணத்துக்காக கொலை செய்யப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
மேலும் உமா மகேசுவரி, அவருடைய கணவரை வெறித்தனமாக கத்தியால் குத்திக்கொன்ற கொலையாளிகள், பணிப்பெண் மாரியின் மீது அவ்வளவு வெறித்தனத்தை காட்டவில்லை என்பதால், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது உறவினர்களோ தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை மூலம் தெரியவந்தது.
இதனால் உமாமகேசுவரி குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் யார்-யார்? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் மதுரையில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சீனியம்மாளிடம் கடந்த 25-ந் தேதி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது மகன் கார்த்திகேயன் பற்றியும் விசாரித்தனர். ஆனால் சீனியம்மாள் தனக்கும், இந்த கொலைகளுக் கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தான் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவில்லை என்றும் மறுத்தார்.
உமாமகேசுவரியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஓட்டல் மற்றும் அந்த பகுதியில் மற்ற கட்டிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அந்த பகுதியில் யார்-யாரெல்லாம் வந்தார்களோ அவர்களை எல்லாம் பிடித்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மூலம் பதிவான உரையாடல்களையும் சேகரித்து ஆராய்ந்தனர்.
அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், கொலை நடந்த அன்று சந்தேகப்படும்படியாக ஒரு கார் உமாமகேசுரியின் வீட்டு பகுதியில் 2 முறை சென்றது தெரியவந்தது. இதனால் அந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த கார் யாருடையது? காரில் சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அது நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனின் கார் என தெரியவந்தது.
அதன் அடிப்படையில் உமாமகேசுவரியின் கொலையில் சீனியம்மாளின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சீனியம்மாளுக்கும், உமாமகேசுவரிக்கும் இடையே கட்சியில் பதவி பெறுவதில் மோதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் மதுரை சென்று அங்கு பதுங்கி இருந்த கார்த்திகேயனை பிடித்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கட்டிடத்தில் வைத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். மேலும் தனிப்படை போலீசாரும் விசாரித்தனர்.
அப்போது அரசியல் முன்விரோதம் காரணமாக உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் ஆகியோரை கொலை செய்ததையும், இந்த கொலைகளை பார்த்ததால் பணிப்பெண் மாரியை கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசாரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
சீனியம்மாளும், உமாமகேசுவரியும் ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க.வில் இருந்து வந்தனர். சீனியம்மாளுக்கு கட்சியில் பல முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. 1996-ம் ஆண்டு அவருக்கு நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து இருந்தனர். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பிறகு 2001, 2006, 2011-ம் ஆண்டு தேர்தலிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி இருந்தனர். அதையும் உமாமகேசுவரி பறித்துக்கொண்டார். கட்சியில் சீனியம்மாள் செல்வாக்கு குறைய உமாமகேசுவரியே காரணம் என்று கருதினர்.
சீனியம்மாள் சமத்துவ மக்கள் கட்சிக்கு சென்று விட்டு மீண்டும் தி.மு.க.வுக்கு வந்த பிறகு, அவரை மாற்றுக்கட்சிக்கு சென்றுவிட்டு வந்தவர் என்று கூறி உமா மகேசுவரி ஏளனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் உமா மகேசுவரி இருந்தால் மீண்டும் சீனியம்மாளுக்கு எந்த பொறுப்பும் கிடைக்காது என்றும், அவரது அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் கருதி, உமா மகேசுவரி உள்ளிட்ட 3 பேரையும் கார்த்திகேயன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட உமாமகேசுவரியின் வீட்டில் இருந்து எடுத்த நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை நெல்லை தாமிரபரணி ஆற்றில் போட்டுவிட்டு தப்பிச் சென்றதாக கார்த்திகேயன் போலீஸ் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. எனவே, அங்கு போலீசார் அவற்றை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உமாமகேசுவரி கொலையில் கார்த்திகேயனை கைது செய்து உள்ளோம். அவரிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. மேலும், அவரது காரை பறிமுதல் செய்து இருக்கிறோம். ஆனால், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டி உள்ளது. கொலையை அவர் மட்டும் செய்ததாக கூறுகிறார். எனவே, அவர் மட்டும்தான் இந்த கொலைகனை செய்தாரா? அல்லது அவருக்கு உடந்தையாக யாரும் இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த கொலைகள் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தின் முழு பின்னணி நிலவரம் குறித்தும், மேலும் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று பிறப்பித்தார்.