‘தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் தூண்டுதலின் பேரில் என் மகனை கைது செய்துள்ளனர்’ மதுரையில் சீனியம்மாள் பேட்டி
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை தொடர்பாக தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து மதுரையில் சீனியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையாவது நேர்மையாக நடக்க வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாகவே எங்கள் குடும்பத்தினர் மீது பழி போட்டுள்ளனர். எனது மகனை போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை.
நாளை (அதாவது இன்று) என் மகனின் நிலை குறித்து தெரிவிக்க கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். நெல்லையை சேர்ந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் 2 பேரின் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கைது நடவடிக்கையும், இந்த பிரச்சினையும் எங்களுக்கு வந்துள்ளது. திரும்பவும் சொல்கிறேன், எனக்கும் உமாமகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்தித்து பேசினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனியம்மாளின் கணவர் சன்னாசி கூறியதாவது:-
உமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம்.
என்ஜினீயரிங் படித்த அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைத்துள்ளது. எனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் தங்கி உள்ளோம். வருகிற 1-ந் தேதி நெல்லைக்கு சென்ற பிறகு அவனை வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தோம். இந்த நேரத்தில் அவனை போலீசார் கைது செய்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.