மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்ததில் 2 பேர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
மகாராஷ்டிராவின் மும்பை அருகே பிவாண்டி நகரில் சாந்தி நகர் என்ற இடத்தில் 4 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இது அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் சிக்கி கொண்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுபற்றி மாநகர ஆணையாளர் அசோக் ரங்காம்ப் கூறும்பொழுது, கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் எங்களுடைய அவசரகால குழு ஒன்று அங்கு சென்று ஆய்வு செய்தது.
இதில் கட்டிடம் இடிந்து விழ கூடும் என தெரிய வந்தது. 8 வருடம் பழமையான கட்டிடம் என்பதும், கட்டிடம் சட்டவிரோத முறையில் கட்டப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
அதனால் கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் நாங்கள் வெளியேற்றினோம். ஆனால் அனுமதியின்றி சிலர் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதன்பின்பே கட்டிடம் இடிந்தது.
இதுவரை 4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து விசாரண மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார்.