ஜப்பான் கடலில் 2 ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா; தென்கொரியா தகவல்
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதன்பின்பு, அமெரிக்க அரசு முறைப்படி வடகொரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில், அணு ஆயுத சோதனையை கைவிடுவது என அந்நாடு அறிவித்தது.
இந்நிலையில், மீண்டும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரிய நாடு தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து இன்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது.
அவை இரண்டும் மேக் 6.5 என்ற உயர் வேகத்தில் 380 கி.மீட்டர் தொலைவுக்கு, 97 கி.மீட்டர் உயரத்தில் பறந்து சென்றது.
எங்களுடைய ராணுவம், கூடுதலாக ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா? என்று நிலைமையை கண்காணித்து வருகிறது. தயார் நிலையிலும் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
இது, கடந்த ஜூலை 25ந்தேதியில் இருந்து வடகொரியா மேற்கொள்ளும் 7வது ஏவுகணை பரிசோதனை ஆகும். இதற்கு முன், ஜூலை 25, ஜூலை 31, ஆகஸ்டு 2, ஆகஸ்டு 6, ஆகஸ்டு 10 மற்றும் ஆகஸ்டு 16 ஆகிய நாட்களில் வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டது.