Breaking News
உலக பேட்மிண்டன் போட்டி:அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் சிந்துசாய் பிரனீத்தும் அசத்தல்

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரனீத் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

சிந்து வெற்றி

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆசிய விளையாட்டு சாம்பியனும், 2-ம் நிலை வீராங்கனையுமான தாய் ஜூ யிங்கும் (சீனதைபே) பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை எளிதில் பறிகொடுத்த சிந்து, 2-வது செட்டில் கடுமையாக போராடி சரிவில் இருந்து மீண்டார். இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டிலும் அனல் பறந்தது. தொடக்கத்தில் 4-8 என்று சறுக்கிய சிந்து அதன் பிறகு எழுச்சி பெற்று 15-15, 17-17 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இந்த சமயத்தில் தாய் ஜூ யிங் பந்தை வெளியே அடித்துவிட்டு இரண்டு முறை தவறு செய்ய சிந்துவின் கை ஓங்கியது. தொடர்ந்து ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டிய சிந்து ஒரு வழியாக எதிராளியை அடக்கினார்.

1 மணி 11 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பி.வி.சிந்து 12-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் தாய் ஜூ யிங்கை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார். தாய் ஜூ யிங்குக்கு எதிராக 15-வது முறையாக மோதிய சிந்து அதில் பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

அரைஇறுதியை எட்டியதன் மூலம் சிந்துவுக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் சிந்து ஏற்கனவே 2 வெள்ளியும், 2 வெண்கலமும் கைப்பற்றி இருக்கிறார். இந்த எண்ணிக்கை 5-ஆக உயருகிறது. சிந்து அரைஇறுதியில் சென் யூ பேவுடன் (சீனா) இன்று மோதுகிறார்.

சாய்னா ஏமாற்றம்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 25-27, 12-21 என்ற செட் கணக்கில் மியா பிளிச்பெல்டிடம் (டென்மார்க்) 72 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். 2-வது செட்டில் வெற்றியின் விளிம்பில் இருந்த போது நடுவரின் தவறான தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக சாய்னா அதிருப்தி தெரிவித்தார்.

‘நடுவரின் மோசமான தீர்ப்பால் 2 மேட்ச் பாயிண்ட் பறிபோய் விட்டது. இந்த ஆடுகளத்தில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதற்கு தேவையான வீடியோ மறுஆய்வு வசதி இல்லை என்பதை நம்ப முடியவில்லை’ என்று சாய்னாவின் கணவர் காஷ்யப் குற்றம் சாட்டினார்.

36 ஆண்டுக்கு பிறகு

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத், 4-ம் நிலை வீரரான ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேஷியா) எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட சாய் பிரனீத் 24-22, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான கிறிஸ்டிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் அவருக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி விட்டது. உலக பேட்மிண்டனில் ஆண்கள் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது 36 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1983-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே வெண்கலம் வென்று இருந்தார்.

சமீபத்தில் அர்ஜூனா விருதுக்கு தேர்வான சாய்பிரனீத் அரைஇறுதியில் நம்பர் ஒன் வீரர் கென்டோ மோமோட்டாவுடன் (ஜப்பான்) இன்று மோதுகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.