அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை கோரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எனவே எனது மனு அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 1996-ம் ஆண்டில் திருத்தங்கல் பேரூராட்சி துணைத்தலைவராக பதவி வகித்ததில் இருந்து தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலாளர் சார்பிலும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், “விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
முடிவில், ராஜேந்திரபாலாஜி மீதான புகார் குறித்த விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. சொத்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை, தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில், சீலிட்ட கவரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு செப்டம்பர் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.