விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் பரிசு
புதுவையில் இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அவர் கூறியதாவது:-
டெல்லியில் கடந்த 15.6.2019 அன்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் புதுவையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தப்பட்டது.
அதில், புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மத்திய அரசு நிதி கூடுதலாக கிடைக்கும் வகையில் மத்திய நிதி குழுவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
2019-20-ம் ஆண்டில் புதுவையின் பட்ஜெட் நிதி மதிப்பீடு ரூ.8 ஆயிரத்து 425 கோடி ஆகும். இதில், மாநில நிதி ஆதாரங்கள் ரூ.5,435 கோடி ஆகும்.
மத்திய அரசின் நிதி உதவி ரூ.1890 கோடியாக இருக்கும். மீதம் உள்ள ரூ.1100 கோடி வெளிச்சந்தையில் கடன் மற்றும் மத்திய நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும்.
மொத்த பட்ஜெட்டில் ரூ.1896 கோடி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவும், ரூ.930 கோடி ஓய்வூதியங்களாகவும் வழங்கப்பட உள்ளது. இது, மொத்த பட்ஜெட்டில் 33 சதவீதமாகும்.
மேலும் அரசு பெற்ற கடனுக்காக ரூ.1550 கோடி அசல் மற்றும் வட்டி செலுத்தப்படும். ரூ.1250 கோடி மின்சாரம் வாங்குவதற்காக செலவிடப்படும்.
அரசின் முக்கிய செலவினங்கள், முதியோர் ஓய்வூதியம், பிற நலத்திட்டங்களுக்கு ரூ.573 கோடியும், பொதுத்துறை நிறுவனம், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானிய கொடையாக ரூ.889 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசு பெற்ற கடனுக்காக வருகிற டிசம்பர் மாதத்துக்குள் ரூ.500 கோடி செலுத்த வேண்டி உள்ளது.
புதுவையில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை அவுட்சோர்சிங் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற படிப்புகளுக்காக ஒருங்கிணைந்த பயிற்சி மையம் தொடங்கப்படும்.
புதுவையில் தனி என்ஜினீயரிங் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். விளையாட்டுகளில் தேசிய அளவில் பதக்கம் பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.