தமிழகம் முழுவதும் ரூ.73 கோடியில் பள்ளி கட்டிடங்கள்எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கிழக்கு முதன்மை சாலையில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பள்ளி கட்டிடங்கள்
மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர்;
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 13 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் 72 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பள்ளிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மருத்துவ கல்விக்கு உதவி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வரும் சேலம் மாவட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வன்னியர் இன மாணவர் எம்.குபேந்திர நாட்டமைக்கு பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் சார்பில் 4½ ஆண்டுகால மருத்துவப் படிப்பின் விடுதிக் கட்டணமான 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தையும், நடப்பாண்டிற்கான விடுதிக் கட்டணமான 54 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
புதிய தொழில் பூங்கா
மேலும், விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி வட்டம், தாமரை குளம் – பொட்டல் குளம் கிராமங்களுக்கு இடையே 102 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்காவிற்கு தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெறவும் வழிவகை ஏற்படும்.
பணி நியமன ஆணைகள்
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, அவர்களது கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.