மிரட்டப்பட்டால் என்ன செய்வீர்கள்?- ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமியின் பதில்
மிரட்டப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் அரவிந்த்சாமி பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. நேற்று (ஞாயிறுக்கிழமை) கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க சசிகலா சென்றிருக்கும் சூழலில், “நினைவுபடுத்துகிறேன். உங்கள் எம்.எல்.ஏ-வைத் தொடர்பு கொண்டு உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்காக பணியாற்றுபவர். ஆகவே அவர் ஏதோ உங்களுக்கு சாதகம் செய்கிறார் என்பது போல் அவர் உங்களை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் அரவிந்த்சாமி.
இந்நிலையில் நேற்று கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து, “தனியார் விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை இருக்கலாம். ஆனால், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தடுப்பவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை”என்று தெரிவித்தார் அரவிந்த்சாமி.
அதற்கு ரசிகர் ஒருவர், “நீங்கள் பொதுஜனம் போன்று கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் பதவிக்கு வந்தால் உங்களை மிரட்ட வாய்ப்புள்ளது” என்று அரவிந்த்சாமியின் ட்விட்டர் தளத்தை மேற்கோளிட்டு கேள்வி எழுப்பினார்.
அதற்கு “அதைப் பற்றி தெரியும். ஆனால் சட்டபூர்வமாக தான் கேள்வி எழுப்புகிறேன். இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் கூறவில்லை. மேலும், 46 வயதாகிவிட்டது. என் மூளையில் தோன்றுவதை பேசும் நேரமிது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.
நன்றி : தி இந்து தமிழ்