Breaking News
10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி – சென்னையில் நாளை தொடக்கம்

93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய ராணுவம், பெங்களூரு ஆக்கி சங்கம், இந்திய விமானப்படை, பஞ்சாப் தேசிய வங்கி, ‘பி’ பிரிவில் ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு கழகம், பஞ்சாப் சிந்து வங்கி, மத்திய செயலகம், இந்திய கடற்படை, தமிழ்நாடு ஆக்கி யூனிட் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நாளை நடக்கும் தொடக்க ஆட்டங்களில் இந்திய கடற்படை- தமிழ்நாடு ஆக்கி யூனிட் (மாலை 4.15 மணி), பெங்களூரு ஆக்கி சங்கம்- பஞ்சாப் தேசிய வங்கி (மாலை 6 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3½ லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இது தவிர சிறந்த முன்கள வீரர், சிறந்த நடுகள வீரர், சிறந்த கோல் கீப்பர், சிறந்த தடுப்பாட்டக்காரர், ஒட்டுமொத்த போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், உயர்தரமான சைக்கிளும் பரிசாக வழங்கப்படும். முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு மின்னொளியில் காட்சி போட்டி ஒன்று நடைபெற உள்ளது.

மேற்கண்ட தகவலை மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) தலைவர் தனஞ்ஜெயதாஸ், அமைப்பு செயலாளர் சண்முகம், முருகப்பா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அருண் முருகப்பன் ஆகி யோர் நேற்று தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.