எல்லையில் அத்துமீறலுக்கு கடும் பதிலடி கொடுக்கும் இந்தியா: 3 வாரங்களில் 10 பாக். படையினர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. அவ்வப்போது எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்துமீறும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க தவறுவதில்லை.
இந்த சூழலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்தது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த பதிலடி நடவடிக்கையில், 3 வாரங்களில் 10 பாகிஸ்தான் படையினர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறும் போது, “ எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் போது, பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கவும், இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைய பாகிஸ்தான் ராணுவம் முயற்சிக்கிறது. இதற்கு இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், பாகிஸ்தானின் 10 -க்கும் மேற்பட்ட கமோண்டா வீரர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.