தண்டவாள கொக்கிகளை பெயர்த்து ரெயிலை கவிழ்க்க சதி? மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காட்டுக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக ரெயில் பாதை உள்ளது. சேலம்-சென்னை ரெயில், சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் மற்றும் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் ஆகிய ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
நேற்று நண்பகல் 12.15 மணியளவில் காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் காட்டுக்கோட்டை கிராமத்தையொட்டி உள்ள ரெயில் தண்டவாளத்தில் வந்தது. அப்போது ரெயில் சக்கரங்களில் இருந்து தடதடவென பலத்த சத்தம் கேட்டதால், என்ஜின் டிரைவர் ரெயிலை மெதுவாக இயக்கினார். அவர் ரெயிலில் இருந்தபடி தண்டவாளத்தை உற்றுநோக்கி பார்த்த போது, தண்டவாளங்களை இணைக்கும் வகையில் பொருத்தப்படும் கொக்கிகள் கழற்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் ரெயிலை அந்த பகுதியில் சுமார் அரைகிலோமீட்டர் தூரத்திற்கு மெதுவாக இயக்கினார். இது குறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயிலை கவிழ்க்க சதி?
அதன்பேரில், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் கொக்கிகளை கழற்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. எனவே தீவிரவாதிகள் ரெயிலை கவிழ்க்க நடத்திய சதியா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காட்டுக்கோட்டை கிராமத்தையொட்டி சுமார் அரைகிலோமீட்டர் தூரத்தில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து அவற்றை இணைக்கும் 40 கொக்கிகள் கழற்றி பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன்மதிப்பு சுமார் ரூ.18 ஆயிரம் ஆகும். சிலர் மது அருந்தும் இடமாக தண்டவாளத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு வந்த சிலர் நேற்று முன்தினம் இரவு இந்த ரெயில் தண்டவாள பகுதியில் அமர்ந்து மது அருந்தி விட்டு, தண்டவாள கொக்கிகளை திருடிச்சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தண்டவாளத்தில் கொக்கிகளை பெயர்த்து எடுத்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.