அமெரிக்காவில் பயங்கரம் சீக்கியர் குத்திக்கொலை இனவெறி காரணமா? போலீஸ் விசாரணை
அமெரிக்காவில் அண்மை காலமாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீக்கியர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், பிறநாடுகளில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை கூறி வருகிறார்.
அவரது கருத்துகள் அந்நாட்டில் வசிக்கும் பிற இனத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடுவதற்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
நடைபயிற்சி சென்ற சீக்கியர்
இந்த நிலையில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள ட்ரேசி நகரில் வசித்து வந்தவர் பர்ம்ஜித் சிங் (வயது 64). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
குத்திக்கொலை
அப்போது, அங்கு வந்த மர்ம நபர் பர்ம்ஜித் சிங்கை வழிமறித்து, அவரிடம் தக ராறில் ஈடுபட்டார். திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பர்ம்ஜித் சிங் உடலில் சரமாரியாக குத்தினார்.
சிகிச்சை பலன் இன்றி…
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, விழுந்தார். அப்போது பூங்காவில் இருந்த நபர்கள் பயத்தில் சத்தம் போட்டனர். அதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவசர கால தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த பர்ம்ஜித் சிங்கை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இனவெறி காரணமா?
இது குறித்து போலீசார் கூறுகையில், “கொலை சம்பவம் நடந்த அதே நேரத்தில், ஒரு நபர் பூங்காவின் வேலியை தாண்டி குதிக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கின்றன. அதனை அடிப்படையாக கொண்டு கொலையாளியை தீவீரமாக தேடி வருகிறோம்” என தெரிவித்தனர்.
பர்ம்ஜித் சிங்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர் சீக்கியர் என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கவலை தெரிவித்து உள்ளனர்.
எனினும், போலீசார் இது இனவெறி தாக்குதல் என உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை என்றும், அனைத்து சாத்தியங்களையும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரூ.71 ஆயிரம் சன்மானம்
பர்ம்ஜித் சிங்கின் மருமகன் ஹர்னேக் சிங் இது குறித்து கூறுகையில், “இந்த நாட்டில் இருப்பதை நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். அதே சமயம் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்” என்றார்.
இதற்கிடையில் கலிபோர்னியாவில் உள்ள சீக்கிய அமைப்பு பர்ம்ஜித் சிங் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தி உள்ளது.
அதுமட்டும் இன்றி கொலையாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு 1000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம்) சன்மானம் அளிக்கப்படும் எனவும் சீக்கிய அமைப்பு அறிவித்துள்ளது.