கள்ளநோட்டுகளை கண்டறிய பிஎஸ்எப் வீரர்களுக்கு பயிற்சி
கள்ளநோட்டுகளை கண்டறிய பி.எஸ்.எப். வீரர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பி.எஸ்.எப். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அதற்குப் பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு பெண்ணை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் விரட்டிச் சென்றனர். அந்தப் பெண் தன்னிடமிருந்த பையை கீழே போட்டுவிட்டு வங்கதேச எல்லைக்குள் ஓடி மறைந்துவிட்டார்.
அவர் வீசிய பையை சோதனையிட்டபோது ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதில் 2000 ரூபாய் நோட்டுகளும் அடங்கும்.
எனவே கள்ள நோட்டுகளை கண்டறிய பி.எஸ்.எப். வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பி.எஸ்.எப். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் பி.எஸ்.எப். வீரர்களுக்கான பயிற்சி தொடங்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்